நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.
இந்நிலையில் தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க. தாக்கல் செய்துள்ள வரவு செலவு கணக்கில் தேர்தல் செலவுகள் காட்டப்பட்டுள்ளன. இதில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, கடந்த 2022 - 2023 ஆம் நிதியாண்டில் பா.ஜ.க.வின் வருமானம் ரூ.2 ஆயிரத்து 361 கோடி ஆகும். அதே நிதியாண்டில் தேர்தலுக்காக ரூ.1092 கோடி செலவிட்டுள்ளது. பழைய செய்தித் தாள் விற்றதன் முலம் சுமார் 16 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. இதன் மூலம் லாபம் 10 மடங்கு அதிகரித்த அதே நேரத்தில் புதிய செய்தித் தாள் வாங்கிய செலவு ரூ. 6 லட்சம் குறைந்துள்ளது. 2022 - 2023 ஆம் நிதியாண்டில் பா.ஜ.க.வுக்கு வங்கிகளில் இருந்து வட்டியாக மட்டும் 237 கோடி கிடைத்துள்ளது.
கடந்த 2021 - 2022 ஆம் நிதியாண்டில் தேர்தலுக்காக ரூ. 646 கோடி பா.ஜ.க. செலவிட்டிருந்த நிலையில் அதற்கு அடுத்த நிதியாண்டில் இரண்டு மடங்கு அளவிற்கு செலவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. பா.ஜ.க.வுக்கு கிடைத்த மொத்த வருவாயில் 54 சதவீதம் அதாவது ரூ.1120 கோடி தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைத்துள்ளது. தேர்தல் விளம்பரங்களுக்காக மட்டுமே பா.ஜ.க. ஒரே ஆண்டில் சுமார் ரூ. 432 கோடி செலவு செய்துள்ளது. தேர்தல் பயணங்களுக்கான விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர் வாடகைக்கு மட்டும் ஒரே ஆண்டில் ரூ. 78 கோடி செலவு செய்துள்ளது. மேலும் 2022 - 2023 ஆம் நிதியாண்டில் காங்கிரஸ் கட்சியின் வருவாய் ரூ.452 கோடி கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி ரூ. 192 கோடி செலவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.