மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜயினி பகுதியில் மகாகாலேஸ்வரர் கோயில் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கோயில், 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான மகாகாலேஸ்வர ஜோதிர்லிங்கத்தைக் கொண்ட புகழ் பெற்ற சிவன் கோயில் ஆகும். இந்த கோயிலில் ஏராளமான பக்தர்கள், இங்கு வந்து சாமி தரிசனம் செய்துகொண்டு செல்வர். இந்த கோயில் கருவறைக்குள் பக்தர்கள் செல்ல கடந்த 1 ஆண்டு காலமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மகாராஷ்டிராவின் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் மகனான ஸ்ரீகாந்த் ஷிண்டே, தனது மனைவி மற்றும் உறவினர்கள் இருவருடன் கோயில் கருவறைக்குள் சென்றுள்ளார். அங்கு சென்று, சிவனின் லிங்கம் சிலையை தொட்டபடியும், சாமி தரிசனமும் செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனை கண்ட பலரும், இந்த விவகாரம் குறித்து அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்துமாறு மத்தியப் பிரதேச மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே, சிவசேனா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.