மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து மகா விகாஸ் அகாதி என்ற பெயரில் உத்தவ் தாக்கரே தலைமையில் கூட்டணி ஆட்சியை நடத்தி வந்தன. கூட்டணி அரசு இரண்டரை ஆண்டுகளைக் கடந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக சிவசேனா கட்சியின் மூத்த தலைவரான ஏக்நாத் ஷிண்டே போர்க்கொடி உயர்த்தினார். 35க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுடன் அசாமில் உள்ள சொகுசு விடுதியில் முகாமிட்டு கூட்டணியிலிருந்து விலக வேண்டும் என உத்தவ் தாக்கரேவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தினார்.
இதனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக அரசியல் குழப்பம் நிலவி வந்தது. இதனால் ஆளுநர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டிருந்தார். இந்த விவகாரம் உச்சநீதிமன்றம் சென்ற நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தத் தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் நேற்று வழங்கினார். இந்நிலையில் ஏக்நாத் ஷிண்டே உடன் முன்னாள் முதல்வர் பட்னாவிஸ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், " கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வர வேண்டும் என்றே மக்கள் வாக்களித்தனர். ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக இவர்கள் இவ்வளவு காலம் ஆட்சிப்பொறுப்பில் இருந்தார்கள். பால் தாக்கரே எண்ணத்திற்கு மாறாக இவர்கள் இந்த இரண்டரை ஆண்டு காலம் ஆட்சி நடத்தியுள்ளார்கள். இனி அவ்வாறு நடக்காது. தற்போது இந்த மாநிலத்தின் புதிய முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே இன்று இரவு பொறுப்பேற்க உள்ளார். இனி மராட்டியத்திற்கு மகிழ்ச்சியான நாட்களாக இருக்கும்" என்று தெரிவித்தார்.
பட்னாவிஸ் முதல்வராகப் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாஜக இந்த திடீர் டிவிஸ்ட்டை கொடுத்துள்ளது. பாஜக தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் அதிருப்தி எம்எல்ஏக்களை வளைந்து ஆட்சியைப் பிடிப்பது சர்ச்சையாகி வருவதால் முதல்கட்டமாக அதிருப்தி எம்எல்ஏ ஒருவரையே முதல்வராகக் கொண்டுவந்து பின்னர் தங்கள் கட்சியைச் சேர்ந்தவருக்கு முதல்வர் பதவியை வழங்கலாம் என்ற முடிவை பாஜக எடுத்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.