கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுடன் சரக்கு ரயில் நேருக்கு நேர் மோதி ஏற்பட்டுள்ள விபத்து பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் தற்போதைய நிலவரப்படி 280 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மொத்தம் 800 பேர் இந்த ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்துள்ளதாகவும் சென்னையைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் இந்த ரயிலில் வந்ததாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில் 900க்கும் மேற்பட்டோர் இதுவரை காயம் அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், “ஒடிஷாவின் பாலசோர் மாவட்டம் அருகே சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா ரெயில் மற்றும் சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள் ஒன்றின் மீது ஒன்று மோதிய ரயில் விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். அதிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகள் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதை அறிந்து சொல்லொணா துயருற்றேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், விபத்தில் காயமுற்று சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப அனைத்து முன்னெடுப்பையும் தமிழக அரசு துரிதமாக எடுக்க வலியுறுத்துகிறேன்.
அது மட்டுமில்லாமல் தமிழகப் பயணிகளின் உற்றார் தொடர்பு கொள்ளத் தனி அவசர தொடர்புக்கான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த வேண்டுமெனவும், இந்த கோர ரயில் விபத்தில் இறந்த தமிழக பயணிகளுக்கு உரிய நிவாரணத் தொகையும், காயமுற்றோருக்கு நிதி உதவியும் உடனடியாக வழங்க வேண்டுமாய் வலியுறுத்துகிறேன்” எனக் கூறியுள்ளார்.