‘இறைச்சிகள் அதிகம் சாப்பிடுவதால்தான், இமாச்சலப்பிரதேசத்தில் இயற்கை பேரிடர்கள் ஏற்படுகின்றன’ என்று ஐஐடி இயக்குநர் பேசியிருப்பது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
இமாசலப்பிரதேச மாநிலம் மண்டி ஐஐடியில் இயக்குநர் லட்சுமிதர் பெஹரா நிகழ்வு ஒன்றில் பங்கேற்று மாணவர்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார். அப்போது அவர், இறைச்சி சாப்பிடுவதால் தான் இமாச்சலப் பிரதேசத்தில் அதிக இயற்கை பேரிடர் ஏற்படுவதாகக் கூறியது தற்போது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த நிகழ்வில் பேசிய லட்சுமிதர் பெஹரா, ‘நீங்கள் நல்ல மனிதர்களாக இருக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?’ என்று கேட்டார். அதற்கு மாணவர்கள் அமைதியாக இருக்க, உடனே, ‘அசைவம் சாப்பிடுவதை நிறுத்துங்கள்’ என்று கூறிய லட்சுமிதர் பெஹரா, ‘இனி அசைவம் சாப்பிட மாட்டேன் என்று உறுதி மொழி எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று மாணவர்களிடம் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “இமாச்சலப்பிரதேசத்தில் மக்கள் இறைச்சி சாப்பிடுவதால்தான் இங்கு மேக வெடிப்பு, நிலச் சரிவு, பெரு வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்கள் ஏற்படுகின்றன. மாமிசத்திற்காக விலங்குகளை அழித்தல் என்பது சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதைப் போன்றது. இதுபோன்ற பேரிடர்களை மீண்டும் நீங்கள் பார்ப்பீர்கள். இந்த பாவத்தின் விளைவுதான் இந்த இயற்கைப் பேரழிவு” என்று பேசினார்.