கர்நாடகாவில் 224 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவைக்கு மே 10, 2023 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. ஆட்சியிலிருக்கும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் மும்முனை போட்டியில் உள்ள நிலையில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை துவங்கியுள்ளது.
காலை 11 மணி நிலவரப்படி காங்கிரஸ் 115 இடங்களிலும், பாஜக 75 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 27 இடங்களிலும், மற்றவை 7 இடங்களிலும் முன்னிலையில் இருக்கின்றன. பெங்களூரு நகரில் உள்ள பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. கல்யாண் கர்நாடகா, கிட்டூர் கர்நாடகா, மத்திய கர்நாடகா, பழைய மைசூர் பகுதிகளிலும் காங்கிரஸ் முன்னிலை வைத்து வருகிறது.
அண்மையில் பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்த ஜெகதீஸ் ஷட்டர் தொடர்ந்து பின்னடைவில் உள்ளார். தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் 45.4 சதவீதமும், பாஜக 38.2 சதவீதமும் வாக்குகளைப் பெற்றுள்ளன. கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை சிக்காவன் தொகுதியில் முன்னிலையில் உள்ளார். முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா ஷிகாரிபுரா தொகுதியில் முன்னிலையில் உள்ளார். முன்னாள் முதல்வரும் சட்டமன்ற ஜனதா தள தலைவருமான குமாரசாமி சென்னபட்ணா தொகுதியில் முன்னிலையில் உள்ளார்.
பாஜக பின்னடைவில் உள்ளதால் கர்நாடக மாநில பாஜக தலைமை அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முன்னிலையில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர்கள் கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து பெங்களூருவுக்கு வருமாறு காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டுள்ளது. அவர்கள் தங்குவதற்கு பெங்களூரில் ஈகிள்டன் ரிசார்ட் புக் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு தேர்தலில் தனிப்பெரும்பான்மையோடு வெற்றிபெற்ற பாஜக ஆட்சி அமைக்க முடியாத சூழ்நிலை நிலவியது. காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி காரணமாக ஆறு நாள் முதலமைச்சராக இருந்த எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்று கண்ணீரோடு வெளியேறினார். 14 மாதங்களுக்கு பின் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியில் 16 எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து பேரவையின் பலத்தை 209 ஆக குறைத்து பாஜக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. இப்படி பெரும்பான்மை இருந்தாலும் கடைசி நொடியில் மாற்றங்கள் இருக்கும் என்பதால் வெற்றிமுகம் கொண்ட வேட்பாளர்களை கண்கொத்தி பாம்பாக கண்காணிக்க ஒரே இடத்தில் வைக்கும் பணியில் மும்முரம் காட்டியுள்ளது காங்கிரஸ்.