கர்நாடகாவில் கடந்த பாஜக தலைமையிலான அரசு கடந்த ஆண்டு கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்திருந்தது. இதனால் பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இதனால் ஏராளமான மாணவிகள் வகுப்புகள் மற்றும் தேர்வுகளைப் புறக்கணித்தனர்.
கர்நாடகா மாநிலத்தில், இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வருவதை கண்டித்து, ஒரு தரப்பு மாணவர்கள் காவி தூண்டுகளை அணிந்து கல்லூரிக்கு வரத்தொடங்கினர். இதன்காரணமாக மாணவிகளுக்கு ஹிஜாப் அணிந்து வர சில கல்லூரிகள் தடை விதித்தன. சில இடங்களில் இரண்டு தரப்பினரும் மோதிக்கொண்டனர். காவல்துறையினர் சில இடங்களில் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை கலைத்தனர். மாணவர்கள் மதத்தை அடையாளப்படுத்தும் உடைகளை பள்ளி, கல்லூரிக்கு அணிந்து வர கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி தடை விதித்தது. மேலும் இது தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
ஏற்கனவே பதவியேற்பு நிகழ்வில் உரையாற்றிய சித்தராமையா, இது தொடர்பாக பாஜகவை கடுமையாக சாடியிருந்தார். அவர்கள்(பாஜகவினர்) ‘சப்கா சத், சப்கா விகாஸ்’ (அனைவரின் ஒத்துழைப்பு, அனைவரின் வளர்ச்சி) என்று கூறுகிறார்கள். ஆனால் தொப்பி, பர்தா மற்றும் தாடி வைத்தவர்களை ஓரங்கட்டுகிறார்கள். இதுதானா அவர்கள் அர்த்தம்?” என பேசியிருந்தார்.
அதேபோல் நிகழ்ச்சி ஒன்றில், 'நீங்கள் இனி ஹிஜாப் அணியலாம். நாளை முதல் எந்த தடையும் இருக்காது என்று நான் உத்தரவிட்டுள்ளேன். எதை வேண்டுமானாலும் அணியலாம், சாப்பிடலாம். உங்கள் தேர்வுகள் உங்களுடையது, என்னுடைய தேர்வுகள் என்னுடையது. நான் வேட்டி மற்றும் குர்தா அணிகிறேன். நீங்கள் பேன்ட் மற்றும் சட்டை அணியுங்கள். அது உங்கள் இஷ்டம். இதில் என்ன தவறு?' என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஹிஜாப் தடையை திரும்ப பெற கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா உத்தரவு பிறப்பித்துள்ளார். உடை, சாதி அடிப்படையில் மக்களை பிரிக்கும் வேலையை பாஜக செய்து வருகிறது என குறிப்பிட்டுள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா, கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த பாஜக அரசின் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.