புதுச்சேரி சட்டசபையின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான சட்டமன்ற கூட்டம் இன்று (30/03/2020) கூடியது. சட்டமன்றத்தில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க எம்.எல்.ஏக்களின் இருக்கைகள் இடைவெளிவிட்டு மாற்றியமைக்கப்பட்டிருந்தன. அதேசமயம் கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் புதுச்சேரி அரசு அலட்சியமாகச் செயல்படுவதாகவும், புதுச்சேரியில் கிருமி நாசினிகள் கூட தெளிக்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டி புதுச்சேரி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு முகக்கவசம் அணிந்து கிருமி நாசினி தெளித்து கொண்டே சட்டமன்றத்துக்குள் வந்தனர். இடைவெளி விட்டு போடப்பட்ட இருக்கைகளை அ.தி.மு.க- பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் மறுத்து நாற்காலிகளை ஒன்றாக்கி அமர்ந்தனர்.
கூட்டம் தொடங்கியதும் தி.மு.க பொதுச்செயலாளர் அன்பழகன் மறைவுக்கு சபாநாயகர் சிவக்கொழுந்து இரங்கல் குறிப்பு வாசித்தார். மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு அவையில் எம்.எல்.ஏக்கள் மவுன அஞ்சலி செலுத்தினர். பின்னர் 2020 ஏப்ரல், மே, ஜுன் ஆகிய 3 மாதங்களுக்கான ரூபாய் 2,042 கோடி நிதிக்கான இடைக்கால பட்ஜெட்டை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்தார்.
அப்போது பேசிய அவர், “புதுச்சேரியில் கரோனாவை முற்றிலும் தடுக்க 995 கோடி ரூபாய் ஒதுக்க பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், நாளை (31/03/2020) முதல் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் கரோனா வாழ்வாதார நிதி 2000 ரூபாய் அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
முன்னதாக கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசு மெத்தனமாக செயல்படுவதாகவும், நோய்த் தடுப்பு நடவடிக்கையில் சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்துகள் கேட்கப்படவில்லை என்றும், இதுதொடர்பாக அ.தி.மு.க பேரவையில் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து விவாதம் செய்ய அனுமதிக்காததைக் கண்டித்தும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பழகன், வையாபுரி மணிகண்டன், அசனா, பாஸ்கர் உள்ளிட்ட நான்கு பேரும் சபாநாயகரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், ஆளும் அரசை கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.
அப்போது சபாநாயகர் சிவக்கொழுந்து,‘சட்டமன்ற மாண்பைக் காப்பாற்ற உறுப்பினர்கள் தவறினால் வெளியேற்றப்படுவார்கள்’என எச்சரிக்கை விடுத்தார். அதையடுத்து மக்கள் உயிர் பிரச்சனை பற்றி அவையில் விவாதிக்காததை கண்டித்து அ.தி.மு.க உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன், “கரோனா வைரஸ் காய்ச்சல் சம்மந்தமாக சரியான முறையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இதுவரை இந்த அரசு எடுக்கவில்லை. மேலும் அரசு ரூ.2000ஐ அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் வழங்கப்படும் என்று கூறியது. ஆனால் இதுவரை வழங்கவில்லை. தற்போது புதுச்சேரியில் உள்ள சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு முகமூடி கூட வழங்க வில்லை. ஆதலால் நாங்கள் வெளிநடப்புச் செய்தோம்" என்றார்.
ஆனால் கரோனா பீதியில் மக்கள் இருக்கும் நிலையில் இந்த இடைக்கால பட்ஜெட் கூட்டத்தைப் புறக்கணிப்பதாகப் பிரதான எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் அறிவித்தது. இந்த இடைக்கால பட்ஜெட் கூட்டம் 10.00 மணிக்கு தொடங்கி 11.00 மணிக்கு ஒரு மணி நேரத்தில் முடிந்தது.