நாம் அன்றாடம் உண்ணும் உணவில் கலப்படங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பெரிய பெரிய உணவு நிறுவனங்கள் மீதும் இத்தைகைய புகார்கள் எழுந்து வருகின்றன.
இந்தநிலையில், உத்தரபிரதேச மாநிலத்தின் ஹத்ராஸில், போலீசார் ஒரு மசாலா தயாரிப்பு தொழிற்சாலையில் சோதனை நடத்தினர். அப்போது, அந்த தொழிற்சாலையில்தயாரிக்கப்டும் மசாலாவில், கழுதை சாணம், வைக்கோல் மற்றும் வேதிப்பொருட்கள் கலக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அங்கிருந்த 300 கிலோ எடைக்கொண்ட கலப்படம் செய்யப்பட்ட மசாலா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த கலப்பட தொழிற்சாலையை நடத்தி வந்த அனூப் வர்ஷினி கைது செய்யப்பட்டுள்ளார். இவர், ஹிந்து யுவா வாஹினி அமைப்பின், முக்கிய பொறுப்பில் உள்ளார். இந்த அமைப்பு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தால் நிறுவப்பட்ட, இந்து தேசியவாத இளைஞர் அமைப்பாகும். அனூப் வர்ஷினியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், உரிமம் இல்லாமல் அங்கு தொழிற்சாலை நடத்தியதும், உரிமம் பெறாமல் மசாலா பொருட்களை தயாரித்ததும் தெரியவந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து, அனூப் வர்ஷினி கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.