கடந்த 10 ஆம் தேதி மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள என்.ஆர்.எஸ். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் உயிரிழந்தார். இதனையடுத்து கடந்த 11 ஆம் தேதி அந்த மருத்துவமனையில் பணியாற்றும் பயிற்சி மருத்துவர் ஒருவர் உயிரிழந்த நோயாளியின் உறவினர்களால் தாக்கப்பட்டார். இதனை கண்டித்து அம்மாநில மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அம்மாநில முதல்வர் மம்தா நடத்திய பேச்சு வார்த்தையும் தோல்வியடைந்த நிலையில், இந்த போராட்டம் நாடு முழுவதும் பரவியது. இதனையடுத்து இன்று நாடு முழுவதும் அடையாள வேலைநிறுத்தம் நடைபெறும் என இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவித்த நிலையில், இன்று காலை 6 மணி முதல் நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாடு முழுவதும் அவசர பிரிவு மற்றும் விபத்து பிரிவு மருத்துவர்கள் மற்றும் பணியாற்றும் நிலையில் மற்றவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். மருத்துவர்களின் இந்த வேலைநிறுத்தத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.