இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ரஷ்யாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தநிலையில், அவர் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சரோடு இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ஆப்கானிஸ்தான் நிலை கவலையளிக்கிறது என கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ஜெய்சங்கர், "ஆப்கானிஸ்தானின் நிலைமை எங்கள் கவனத்தை அதிகமாக ஆக்கிரமித்துள்ளது. ஏனெனில் இது பிராந்திய பாதுகாப்பின் மீது நேரடி தாக்கத்தைக் கொண்டது. இன்றைய உடனடித் தேவை வன்முறையைக் குறைப்பதுதான் என நாங்கள் நம்புகிறோம். ஆப்கானிஸ்தானுக்குள்ளும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நாம் சமாதானத்தை நாட வேண்டுமானால், பொருளாதார, சமூக அடிப்படையில் முன்னேற்றம் காணப்படுவதை உறுதிசெய்ய இந்தியாவும் ரஷ்யாவும் ஒன்றிணைந்து செயற்படுவது முக்கியம். நாங்கள் ஒரு சுதந்திரமான, இறையாண்மை கொண்ட மற்றும் ஜனநாயகமான ஆப்கானிஸ்தானுக்கு கடமைப்பட்டுள்ளோம்" என கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர், "நிச்சயமாக ஆப்கானிஸ்தானில் நிகழ்வுகள் செல்லும் திசை குறித்து கவலைப்படுகிறோம். ஆப்கானிஸ்தானின் இந்த நிலைமைக்கு வன்முறை தீர்வாக இருக்க முடியாது. ஆப்கானிஸ்தானை யார் நிர்வகிக்கிறார்கள் என்பது சட்டபூர்வமான அம்சத்தைக் கொண்டுள்ளது. அதைப் புறக்கணிக்கக்கூடாது" என தெரிவித்துள்ளார்.