கர்நாடக மாநிலம் தார்வாட் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வந்த 5 மாடி தனியார் வணிக வளாக கட்டிடம் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் திடீரென்று இடிந்து விழுந்தது.

ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட தரைத்தளம் மற்றும் முதல் மாடியில் கடைகள், கம்ப்யூட்டர் பயிற்சி மையம் உள்ளிட்டவைகள் செயல்பட்டு வந்த நிலையில் அதற்கு மேலே கட்டுமான வேலைகள் நடந்து வந்துள்ளது. அப்போது திடீரென்று அந்த கட்டிடம் இடிந்து விழுந்ததால் அங்கு கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்கள், கீழ்தளங்களில் கடைகளுக்கு வந்த வாடிக்கையாளர்கள், கடை ஊழியர்கள், கம்ப்யூட்டர் பயிற்சி மையத்திற்கு வந்த மாணவ-மாணவிகள் என 100-க்கும் மேற்பட்டோர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கினர்.
கடந்த 5 நாட்களாக மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை 15 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருப்பதாகவும் தெரிவதால் பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கட்டிட உரிமையாளர், முதலீட்டாளர் மற்றும் கட்டுமான வேளைகளில் ஈடுபட்ட பொறியாளர் உட்பட நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதில் தார்வார் தொகுதியின் முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வினய் குல்கர்னியின் மாமனார் தான் இந்த கட்டிடத்திற்கான தொகையை முதலீடு செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் அவர் காவல்துறையிடம் சரணடைந்துள்ளார்.