கர்நாடகா மாநிலம், பெங்களூர் மாகடி சாலையில் ஜி.டி. வேர்ல்ட் என்ற தனியார் வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில், நேற்று முன்தினம் (16-07-24) பகீரப்பா என்ற விவசாயி தனது மகன் நாகராஜுடன், அங்குள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டரில் படம் பார்க்க வந்துள்ளார்.
ஆனால், பகீரப்பா வேட்டி அணிந்து வந்திருந்ததால், அவரை உள்ளே செல்ல அனுமதிக்காமல் பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இது தொடர்பாக பகீரப்பாவும், அவரது மகனும் உள்ளே செல்ல அனுமதிக்குமாறு கேட்டுள்ளனர். ஆனாலும், அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. மேலும், வேட்டி அணிந்து வந்தததால் விவசாயிக்கு அனுமதி அளிக்காத வணிக வளாகத்திற்கு எதிராக கண்டனங்கள் எழுந்து வந்தது. இதனைத் தொடர்ந்து, கன்னட அமைப்பினர் மற்றும் விவசாய சங்கத்தினர், நேற்று அந்த தனியார் வணிக வளாகம் முன்பு போராட்டம் நடத்தினர். விவசாயியை வணிக வளாகத்திற்குள் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியதற்காக வணிக நிர்வாகம், விவசாயி பகீரப்பாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இதனால், அந்த இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து காங்கிரஸ் அமைச்சர் சந்தோஷ் லாட் கூறியதாவது, ‘வேட்டி அணிந்து வந்த விவசாயி வணிக வளாகத்திற்குள் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்திய விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறினார்.