இரண்டு நாட்கள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.
அதன் தொடர்ச்சியாக டெல்லியில் குடியசுத்தலைவர் மாளிகையில் இரவு விருந்தில் பங்கேற்க வந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் மனைவி மெலனியாவை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வரவேற்றார். மேலும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூட்டாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
குடியசுத்தலைவர் மாளிகையில் அதிபர் ட்ரம்ப்புக்கு அளிக்கப்படும் விருந்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்றுள்ளார். அப்போது அதிபர் ட்ரம்ப்புடன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.
இந்த விருந்தில் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், கர்நாடக முதல்வர் எடியூரப்பா, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், உள்பட பல்வேறு மாநில முதல்வர்களும், அமெரிக்கா- இந்தியா தூதரக உயர் அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.
ட்ரம்ப்புக்கு அளிக்கப்படும் விருந்தில் பரிமாறப்படும் சைவ மற்றும் அசைவ உணவு வகைகள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் பிரியாணி, ஜூஸ், வெண்ணிலா ஐஸ்கிரீம், சூப் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளது.