தலைநகர் டெல்லியில் கடுமையான வெப்ப அலை வீசி வருவதால் அங்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. மேலும், ஹரியானா அரசு டெல்லிக்கு தர வேண்டிய தண்ணீரில் பற்றாக்குறை ஏற்பட்டதால், டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதாக டெல்லி அரசு குற்றம் சாட்டி வருகிறது. தண்ணீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். இன்னும், சில பகுதிகளில் வாழும் மக்கள் டேங்கர் லாரியை நோக்கி முண்டியடித்துக் கொண்டு தண்ணீரைப் பிடிப்பதற்காக காலி குடங்களுடன் செல்லும் காட்சிகள் சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதனிடையே தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்கவும், தண்ணீர் வீணாவதைத் தடுக்கவும் டெல்லி நீர்வளத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
சில தினங்களுக்கு டெல்லியில் ஏற்பட்டிருக்கும் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்க உதவ வேண்டும் என உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியானா மாநில அரசு முதல்வர்களுக்கு டெல்லி ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி கடிதம் எழுதியிருந்தார். ஆனால், ஹரியானா அரசு உரிய தண்ணீரை வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே, டெல்லியில் ஏற்பட்டிருக்கும் தண்ணீர் பற்றாக்குறையைக் கண்டித்து அம்மாநிலம் முழுவதும் ஆங்காங்கே போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், டெல்லி மக்களுக்கு வழங்க வேண்டிய தண்ணீரை ஹரியானா அரசு வழங்கக் கோரி டெல்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி கடந்த 21ஆம் தேதி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். அவரது உண்ணாவிரதம் இன்று (24-06-24) நான்காவது நாளாக தொடர்கிறது. இதனால், அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவரது உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.
இதனிடையே டெல்லி அமைச்சர் அதிஷி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியதாவது, “இன்று எனது காலவரையற்ற உண்ணாவிரதத்தின் நான்காவது நாள். டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளேன். டெல்லிக்கு சொந்தமாக தண்ணீர் இல்லை. தண்ணீர் அனைத்தும் அண்டை மாநிலங்களில் இருந்து வருகிறது. கடந்த 3 வாரங்களாக ஹரியானா மாநிலம், டெல்லி மக்களுக்கு தண்ணீர் விநியோகத்தை குறைத்துள்ளது.
நேற்று மருத்துவர் வந்து என்னை பரிசோதித்தார். என் பிபி குறைகிறது, சுகர் குறைகிறது, உடல் எடை குறைகிறது என்றார். கீட்டோன் அளவு மிகவும் அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார். கீட்டோன் அளவு இவ்வளவு அதிகரிப்பது நல்லதல்ல என்று மருத்துவர் அறிவுறுத்தினார். இது உடலுக்கு தீங்கு விளைவிக்கும், ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். ஆனால் எனது உடல்நிலை எவ்வளவு மோசமாக இருந்தாலும், என் உடல் எவ்வளவு வலியில் இருந்தாலும், இந்த உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற எனது தீர்மானம் வலிமையானது. 28 லட்சம் டெல்லி மக்களுக்கு ஹரியானா அரசு தண்ணீர் வழங்கும் வரை எனது உடல்நிலை எவ்வளவு மோசமாக இருந்தாலும் உண்ணாவிரதத்தைத் தொடருவேன்.