டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லி யூனியன் பிரதேச நிர்வாகத்தை பொறுத்தவரையில் இந்திய ஆட்சி பணி (IAS) மற்றும் இந்திய காவல் பணி (IPS) அதிகாரிகள் நியமனம் செய்வது மற்றும் பணியிட மாற்றம் செய்வது தொடர்பான அதிகாரம் மத்திய அரசின் உள்துறையின் கீழ் உள்ளது.
மக்களால் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி செய்து வரும் டெல்லி யூனியன் பிரதேச அரசுக்கு சட்ட ஒழுங்கை காக்கும் அதிகாரிகளின் நியமனம் மற்றும் பணியிட மாற்றம் தொடர்பாக அதிகாரம் இல்லாதது மற்றும் அரசு நிர்வாகத்தில் ஆளுநரின் குறுக்கீடு தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு அரசு சார்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, அதை விசாரித்து வந்த உயர்நீதிமன்றம் டெல்லி ஆளுநருக்கு சாதகமாகத் தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இரு நீதிபதிகள் விசாரித்து வந்த நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த நீதிபதிகள் இருவரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். ஒரு நீதிபதி ஆளுநருக்கு ஆதரவாகவும் மற்றொரு நீதிபதி டெல்லி அரசுக்கு ஆதரவாகவும் தீர்ப்பு வழங்கினர். இதனால் இந்த வழக்கானது 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது. அதன் பின்னர் மத்திய அரசு விடுத்த கோரிக்கையையடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் மற்ற நீதிபதிகளான ஹிமா கோலி, கிருஷ்ண முராரி, நரசிம்மா மற்றும் எம்.ஆர்.ஷா அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு தேசியத் தலைநகர் பிரதேச டெல்லி அரசு திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி டெல்லி அரசு எந்த ஒரு முடிவு எடுத்தாலும் அதற்கு துணை நிலை ஆளுநரின் கருத்தைக் கேட்டறிவது கட்டாயமாக்கப்பட்டது. இதன் பிறகு அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்வதற்கு கூட துணைநிலை ஆளுநரின் அனுமதியைப் பெற வேண்டிய நிலை டெல்லி அரசுக்கு ஏற்பட்டது.
இந்த நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு நேற்று (11ம் தேதி) இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பில், “மற்ற யூனியன் பிரதேசங்களுக்கும் டெல்லி யூனியன் பிரதேசத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. டெல்லிக்கு மாநில அந்தஸ்து இல்லாமல் இருக்கலாம். ஆனால், சட்டமன்றம் மூலம் சட்டம் இயற்றும் அதிகாரம் இருக்கிறது. ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடம் மட்டுமே அதிகாரம் இருக்க வேண்டும்.
பொது சட்ட ஒழுங்கு, காவல் துறை மற்றும் நிலம் உள்ளிட்ட விவகாரங்களைத் தவிர்த்து, இதர அனைத்து அதிகாரங்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசுக்கே உள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகள் அவரவர் துறை சார்ந்த அமைச்சர்களுக்குக் கட்டுப்பட்டுப் பணியாற்ற வேண்டும். டெல்லி துணைநிலை ஆளுநரை விட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே முழு அதிகாரமும் உள்ளது. டெல்லி அரசின் அறிவுரைப்படியே துணைநிலை ஆளுநர் செயல்பட வேண்டும்” என தெரிவித்தனர்.
இந்த தீர்ப்பு ஆம் ஆத்மி அரசுக்கு கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படும் நிலையில், தீர்ப்பை வரவேற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், “எங்களது கைகள் கட்டப்பட்டு நீந்துவதற்காக தண்ணீரில் வீசப்பட்டோம். ஆனால், எங்களால் மிதக்க முடிந்ததால் தடைகள் வந்த பொழுதும் சிறப்பாகச் செயல்பட்டு வெற்றியைப் பெற்றுள்ளோம்” எனத் தெரிவித்தார். இந்த நிலையில், நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகி இருந்த சில மணி நேரத்திலேயே டெல்லி சேவைகள் துறை செயலாளரை பணி நீக்கம் செய்து அதிரடி காட்டியுள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால்.