டெல்லி மாநில முதல்வராக மூன்றாவது முறையாக பதவியேற்றார் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்.
டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த பதவியேற்பு விழாவில் மூன்றாவது முறையாக டெல்லி மாநில முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்றார். அம்மாநில ஆளுநர் அனில் பைஜல் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
அதை தொடர்ந்து துணை முதல்வராக மணீஷ் சிசோடியா மீண்டும் பதவியேற்றார். அதேபோல் கடந்த ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த சத்தேந்திர ஜெயின், கோபால் ராய், கைலாஷ் கெலாட், இம்ரான் ஹுசைன், ராஜேந்திர கவுதம் ஆகியோரும் மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்றனர். இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துக்கொண்டனர்.
முதல்வராக பதவியேற்ற பின் விழாவில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், "வெற்றியை அளித்த டெல்லி மக்களுக்கு நன்றி. டெல்லியில் உள்ள 2 கோடி மக்களும் எனது குடும்பத்தினர். டெல்லியின் மகன் முதல்வராக பதவியேற்றுள்ளதால் மக்கள் கவலைப்பட தேவையில்லை. டெல்லியின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடியின் உதவியை எதிர்பார்க்கிறேன். கட்சி, மதம்,சாதி பேதமின்றி 5 ஆண்டுகளும் அனைவருக்காகவும் பாடுபடுவேன். டெல்லி மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க முடியாது. டெல்லி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் கட்டணம் வசூலிக்க முடியாது. வாழ்க்கைக்கு அத்தியாவசியமானவை அனைத்தும் அனைத்தும் இலவசம். இயற்கை அனைத்தையும் இலவசமாக தருவதால் நானும் டெல்லி மக்களுக்கு இலவசங்களை வழங்குகிறேன்." இவ்வாறு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பேசினார்.