இந்தியாவில் கரோனா பரவலால் நடத்தபடாமல் இருந்த சிபிஎஸ்இ தேர்வு, பிரதமர் தலைமையிலான கூட்டத்திற்கு பிறகு ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் 12 வகுப்பு மாணவர்களுக்கு எதன் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என அறிவிக்கப்படவில்லை. இதுகுறித்து உச்சநீதிமன்றமும் மத்திய அரசிடம் இன்று கேள்வியெழுப்பியது.
இந்தநிலையில் சிபிஎஸ்இ 12 வகுப்பு மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக சிபிஎஸ்இ-யின் செயலாளர் அனுராக் திரிபாதி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர், "12 ஆம் வகுப்புக்கான சிபிஎஸ்இ-யின் மதிப்பீட்டு அளவுகோல்கள் பரிசீலனையில் உள்ளன. அதை இறுதி செய்ய மேலும் இரண்டு வாரங்கள் ஆகும். வல்லுநர்கள் அனைத்து சாத்தியக்கூறுகளையும் கருத்தில்கொண்டு முடிவினை எடுப்பார்கள்" என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், "மதிப்பீட்டு நடைமுறையில் மாணவர்கள் திருப்தியடையவில்லை என்றால், கரோனாவிற்கு பிறகு அவர்களுக்கு தேர்வு எழுத வாய்ப்பளிக்கப்படும். 12 ஆம் வகுப்பு முடிவுகள் தொடர்பாக எந்தவொரு பிரச்சினையையும் மாணவர்கள் எதிர்கொள்ளாமல் இருப்பதை நாங்கள் உறுதிசெய்கிறோம். உயர் பல்கலைக்கழகங்களில் சேர்க்கை தொடங்குவதற்கு முன்பு அவர்களின் முடிவுகள் வெளியாகும் என உறுதியளிக்க விரும்புகிறேன்" எனவும் தெரிவித்துள்ளார்.