Skip to main content

ஆம் ஆத்மி எம்.பி.யின் ஜாமீன் மனு; அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

Published on 08/01/2024 | Edited on 08/01/2024
The court ordered the enforcement department for Aam Aadmi MP's bail plea

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது. இந்த உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, டெல்லி துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 21 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், கடந்த ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிரடியாகக் கைது செய்திருந்தது. அதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறையும் மணீஷ் சிசோடியவை கைது செய்தது. இதையடுத்து மணீஷ் சிசோடியா தற்போது நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார்.

அதே சமயம், டெல்லி கலால் கொள்கை தொடர்பான பண மோசடி விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங்கின் டெல்லி வீட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதனையடுத்து சஞ்சய் சிங், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து, அவர் தற்போது நீதிமன்றக் காவலில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இதையடுத்து, கடந்த ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதி சஞ்சய் சிங் சார்பில் டெல்லி நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கக் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், சஞ்சய் சிங்கின் மனு இன்று (08-01-24) விசாரணைக்கு வந்தது. அப்போது, சஞ்சய் சிங் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மோஹத் மாத்தூர்,   “ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் கடந்த 3 மாதங்களாக காவலில் இருக்கிறார். இந்த குற்றத்திற்கும் அவருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அதனால், அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என்று தெரிவித்தார். 

இதனையடுத்து, சஞ்சய் சிங்கின் ஜாமீன் மனுவுக்குப் பதிலளிக்குமாறு அமலாக்கத்துறைக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியதோடு மட்டுமல்லாமல் இந்த வழக்கு ஜனவரி 29 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. 

சார்ந்த செய்திகள்