
மேற்கு வங்கத்தில், கடந்த மார்ச் 27ஆம் தேதி தொடங்கி பல்வேறு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நான்கு கட்ட தேர்தல் முடிவடைந்துவிட்ட நிலையில், ஐந்தாம் கட்ட தேர்தல் 17 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கிடையே, முஸ்லிம்கள் தங்கள் வாக்குகளைப் பிளவுபடாமல் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு அளிக்க வேண்டும் எனக் கூறியது தொடர்பாக விளக்கம் கேட்டும், மத்திய படைகள் பாஜகவிற்கு ஆதரவாகச் செயல்படுவதாக அவர் முன்வைத்த குற்றச்சாட்டுக்குக் கண்டனம் தெரிவித்தும், அதுகுறித்து விளக்கம் கேட்டும் இந்தியத் தேர்தல் ஆணையம் மம்தாவிற்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இந்த நிலையில், மம்தா பானர்ஜியின் பேச்சுக்கள், மாநிலம் முழுவதும் சட்ட ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் எனக் கூறி, நேற்று இரவு 08.00 மணி முதல் இன்று இரவு 08.00 மணி வரை தேர்தல் பிரச்சாரம் செய்ய இந்தியத் தேர்தல் ஆணையம் தடை விதித்தது. இந்தத் தடையை தேர்தல் ஆணையத்தின் ஜனநாயக விரோத, அரசியலமைப்பற்ற முடிவு என விமர்சித்த மம்தா, தேர்தல் ஆணையத்தின் முடிவைக் கண்டித்து கொல்கத்தா காந்தி சிலை முன்பு இன்று தர்ணாவில் ஈடுபட்டார். அந்தப் போராட்டத்தின் போது அவர் வரைந்த ஓவியம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.