ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், தனது மகன் பாம்பு கடித்து இறந்துவிட்டதால் கருணைத் தொகை வேண்டி ஒடிசா நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அவர் அளித்த மனு மீதான விசாரணை நேற்று (09-01-24) நீதிமன்றத்துக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது, பாம்பு கடித்து இறந்துவிட்டதாகக் கூறப்படும் நபரின் மருத்துவ அறிக்கை அரசு சார்பில் இணைக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த அறிக்கை தெளிவாகப் புரிந்துகொள்ளும்படி இல்லாமல் இருந்துள்ளது என்று கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.கே. பனிகிரஹி, சம்பந்தப்பட்ட மருத்துவரை ஆஜராகும்படி உத்தரவிட்டார். அதன்படி, அந்த மருத்துவரும் காணொளி வாயிலாக ஆஜராகி, அந்த அறிக்கை தொடர்பாக விளக்கமளித்தார். இதையடுத்து, இந்த வழக்கில் நீதிபதி தீர்ப்பு வழங்கினார். மேலும் ஒடிசா அரசுக்கும் சேர்த்து ஒரு உத்தரவையும் பிறப்பித்தார்.
அதில் அவர் கூறியதாவது, ‘அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் மருந்து சீட்டை கையால் எழுதுவதால் அதை புரிந்துகொள்ள நோயாளிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. உடல் பிரேதப் பரிசோதனை அறிக்கை கூட கையால் எழுதுவதால் நீதிமன்றத்தில் சரியான முறையில் தாக்கல் செய்ய முடியவில்லை. அதனால், அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் மருந்து சீட்டு, மருத்துவ அறிக்கை ஆகியவற்றை கையால் எழுதுவதை தவிர்த்து, முடிந்தால் பெரிய எழுத்துகளில் அல்லது கம்ப்யூட்டரில் டைப் செய்து தர வேண்டும் என ஒடிசா அரசு சுற்றறிக்கை வெளியிட வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.