டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 5 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார்.
இந்தச் சூழலில் கடந்த 02-02-2024 அன்று விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை ஐந்தாவது முறையாக சம்மன் அனுப்பியது. ஆனால், அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகாமல் புறக்கணித்தார். 5 முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாத அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு அளித்தது.
இதனைத் தொடர்ந்து, 6வது முறையாக அமலாக்கத்துறை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியது. அதில், வருகிற 19 ஆம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அமலாக்கத்துறை தொடுத்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அரவிந்த் கெஜ்ரிவால் காணொளி மூலம் நேரில் ஆஜரானார். சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளதால் நேரில் ஆஜராக இயலவில்லை என்று விளக்கமளித்துள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால். அதனைக் கேட்டுக்கொண்ட நீதிமன்றம், மார்ச் 16 ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட்டு வழக்கைத் தள்ளி வைத்தது.