மும்பையில் நேற்று முன்தினம் (02/10/2021) கோவா செல்லக்கூடிய சொகுசுக் கப்பல் ஒன்றில் பார்ட்டி நடைபெற்றது. இந்த பார்ட்டியில் பங்கேற்றவர்கள் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களைப் பயன்படுத்தினர். இது குறித்துத் தகவலறிந்த போதைப்பொருள் தடுப்பு பிரிவின் மும்பை மண்டல இயக்குநர் சமீர் வான்கடே தலைமையிலான அதிகாரிகள், அந்த சொகுசுக் கப்பலைச் சுற்றி வளைத்து, கப்பலுக்குள் சென்று பார்த்தபோது, தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களைப் பயன்படுத்தியது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து, பார்ட்டியில் பங்கேற்றவர்களைக் கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், நேற்று (03/10/2021) காலை பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகனான ஆர்யன்கானை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்ற நிலையில், 20 மணிநேர விசாரணைக்குப் பின் ஆர்யன்கானை கைது செய்தனர்.
சொகுசு கப்பலில் நடந்த விருந்தில் போதைப்பொருட்கள் பயன்படுத்திய வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள போலீசார், போதைப் பொருள் பயன்படுத்துவோரிடம் விசாரித்தால்தான் விநியோகம் செய்தவர்களைக் கண்டுபிடிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஆர்யன்கான் உள்ளிட்ட 8 பேரும் மும்பை விசாரணை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இவர்களிடம் குறைந்த போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டாலும் இவர்களுக்கு யாரிடம் இருந்து இவை கிடைத்தது என்று விசாரிக்க அக்.11 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என முறையிட்டார். ஆர்யன்கான் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அந்த விருந்துக்கு ஆர்யன்கான் சிறப்பு விருந்தினராக மட்டுமே அழைக்கப்பட்டார். அந்த நேரத்தில் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஆர்யன்கான் கையிலிருந்து எந்த போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்படவில்லை. இதைப் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரே உறுதிப்படுத்திவிட்டனர். எனவே ஏன் அவரை கைது செய்தீர்கள். ஏன் கப்பலிலிருந்த அனைவரையும் கைது செய்யவில்லை. எனது தரப்பைச் சேர்ந்தவருக்கு அந்த கப்பலையே விலைக்கு வாங்கும் அளவிற்குப் பணம் இருக்கிறது. வேண்டுமென்றே சிக்கவைத்துள்ளனர் என வாதம் வைக்கப்பட்டது.
வழக்கு விசாரணையின் இறுதியில் ஆர்யன்கானுக்கு ஜாமீன் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அக்.7 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை அறிவித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.