
இந்தியாவில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது. மேலும், கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில் ராகுல் காந்தி, கரோனா பாதிப்பு தீவிரமடையும் என்றும், விளம்பரங்களுக்கு செலவழிக்காமல் தடுப்பூசிகள் மற்றும் ஆக்சிஜனில் கவனம் செலுத்துமாறும் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், "விளம்பரங்களிலும், தேவையற்ற திட்டங்களிலும் செலவு செய்வதற்குப் பதிலாக, தடுப்பூசிகளிலும் ஆக்சிஜனிலும், பிற சுகாதார சேவைகளிலும் கவனம் செலுத்துமாறு மத்திய அரசை அமைதியாக கேட்டுக்கொள்கிறேன். இந்த (கரோனா) நெருக்கடி வரும் நாட்களில் இன்னும் தீவிரமாகும். நாடு அதைக் கையாள தயாராக இருக்க வேண்டும். தற்போதைய அவலநிலை தாங்கிக்கொள்ள முடியாதது" என கூறியுள்ளார்.
சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் மத்திய அரசு வெளியிட்ட 3 ஆயிரத்து 404 கோடி ரூபாய்க்கான டெண்டரை, நாட்டில் நிலவும் கரோனா சூழ்நிலையைச் சுட்டிக்காட்டி ராகுல் காந்தி நேற்று (23.04.2021) விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.