இந்தியாவின் தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24- ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் நாட்டின் 15- வது குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரவுபதி முர்மு, தி.மு.க., காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் களம் கண்டுள்ளனர்.
நடந்து முடிந்த குடியரசு தேர்தலில் பதிவான வாக்குகளைக் கொண்ட வாக்குப் பெட்டிகள் அனைத்தும் அந்தந்த மாநிலங்களிலிருந்து பலத்த பாதுகாப்புடன் விமானத்தில் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் அமைக்கப்பட்டிருக்கும் வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்துள்ளது.