மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் ஒன்றான கோவாவிற்குப் பயணம் மேற்கொண்டார். அங்கு தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழக வளாகத்தின் பூமி பூஜையில் கலந்துகொண்ட அவர், பின்பு தலேகாவில் பாஜக தொண்டர்களிடையே உரையாற்றினார்.
அப்போது அவர், "காங்கிரஸ் அரசு இருந்த காலத்தில், ஒரு கூட்டணி இருந்தது. அது சிரிப்பை ஏற்படுத்தியது. ஒவ்வொரு அமைச்சரும் தங்களைப் பிரதமராக கருதினர், ஆனால் ஆதரவற்ற பிரதமரை யாரும் பிரதமராக நினைக்கவில்லை. இப்போது நீங்கள் இந்திய பாஸ்போர்ட்டைக் காட்டும்போது, வெளிநாட்டு அதிகாரிகள் புன்னகைத்து, நீங்கள் மோடி நாட்டிலிருந்து வருகிறீர்களா என கேட்கிறார்கள். இந்திய பாஸ்போர்ட்டின் மதிப்பை அதிகரிக்கும் பணியை மோடி செய்துள்ளார்" என தெரிவித்தார்.
தொடர்ந்து அவர், "நமக்கு நமது சொந்த சின்னத்தில் முழு பெரும்பான்மையுடன் கூடிய அரசாங்கம் வேண்டும். நமக்கு ஏன் முழு பெரும்பான்மை வேண்டும்? ஏனென்றால் அது நிறைய வித்தியாசத்தை ஏற்படுத்தும். மோடிக்கு முழு பெரும்பான்மை கிடைக்கவில்லையென்றால் அயோத்தியில் இராமர் கோயிலைக் கட்டியிருக்க முடியுமா? 370வது பிரிவை நாம் இரத்து செய்திருக்க முடியுமா?" எனவும் கூறினார்.