பிரிட்டனில் உருமாறிய கரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக இங்கிலாந்து விமானங்கள், இன்று (22/12/2020) இரவு 11.59 மணியிலிருந்து வரும் டிசம்பர் 31- ஆம் தேதி வரை இந்தியாவிற்கு வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை அனைத்து வகையான விமானங்களுக்கும் பொருந்தும் என மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. மேலும் இன்று (22/12/2020) இரவு வரை, இந்தியா வரும் இங்கிலாந்து பயணிகளுக்குக் கட்டாயம் ஆர்.டி.-பி.சி.ஆர். கரோனா பரிசோதனை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'பிரிட்டனில் இருந்து நவம்பர் 25- ஆம் தேதி முதல் டிசம்பர் 23- ஆம் தேதி வரை, இந்தியா வந்தவர்களைக் கண்காணிக்க வேண்டும். பிரிட்டனில் இருந்துவந்த பயணிகளின் சளி மாதிரிகளை புனே ஆய்வகத்திற்கு அனுப்ப வேண்டும். கரோனா பரிசோதனையில் 'நெகட்டிவ்' என முடிவுவந்தால் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். கரோனா உறுதியானால் மருத்துவமனையில் தனிமைப்படுத்த வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.