Skip to main content

கரோனா பரவலின் இரண்டாவது அலை! தடுப்பூசிகள் வீணடிக்கப்படுவது கவலையளிக்கிறது!- பிரதமர் மோடியின் ஆதங்கம்!

Published on 17/03/2021 | Edited on 17/03/2021

 

coronavirus pm narendra modi discussion with cms for today

 

தமிழகம், கர்நாடகா, குஜராத், மத்திய பிரதேசம், டெல்லி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பரவல் திடீரென அதிகரித்திருப்பதாக மத்திய சுகாதாரத் துறை சமீபத்தில் எச்சரிக்கை செய்திருந்தது. தமிழக சுகாதாரத்துறையும் தமிழகத்தில் சில மாவட்டங்களில் கரோனா அதிகரித்திருப்பதை உறுதிப்படுத்தியது.

 

இந்த நிலையில், மார்ச் 16- ஆம் தேதி மாவட்ட நிர்வாகத்துடன் ஆலோசனை நடத்திய தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், கரோனா பரவலைத் தடுப்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கியிருந்தார். இதனையடுத்து, அரசுத் தரப்பிலிருந்து பொதுமக்களை எச்சரிக்கை செய்யும் வகையில் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் ராஜீவ் ரஞ்சன். குறிப்பாக, ஊரடங்கு காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வலியுறுத்தியும், முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

 

இந்த நிலையில், மாநில முதல்வர்களுடன் கரோனா பரவல் தடுப்பு குறித்தும், தடுப்பு ஊசி போட்டுக்கொள்வது குறித்தும் வீடியோ கான்ஃபரன்ஸ் வழியாக விவாதித்தார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளவில்லை. அவருக்குப் பதிலாக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

அந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "உலகத்தில் பல நாடுகள் கரோனா பெருந்தொற்றின் பல்வேறு அலைகளைச் சந்தித்துள்ளன. நமது நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 96 சதவீத்த்திற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். இதனால் இறப்பு சதவிகிதம் பெருமளவு குறைந்திருந்தது. இந்தச் சூழலில், தற்போது திடீரென சில மாநிலங்களில் கரோனா பரவல் அதிகரிக்கத் துவங்கியுள்ளது.

 

coronavirus pm narendra modi discussion with cms for today

 

தேசம் முழுவதும் 70 மாவட்டங்களில் கரோனா பரவல் பன்மடங்கு அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்காவிட்டால் நாடு முழுவதும் வேகமாகப் பரவி விடும். அந்த வகையில் இந்தியாவில் இரண்டாவது அலை பரவுகிறதோ என்கிற சந்தேகம் எழுகிறது. நகரங்களைப் போல கிராமங்களில் பரவுவது கவலையளிக்கிற விசயம். அதனால், எல்லோரும் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம். சில மாநிலங்களில் தடுப்பூசிகள் வீணடிக்கப்படுவதாக வரும் தகவல்கள் கவலையளிப்பதாக இருக்கிறது.

 

தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும் கவனமாக இருப்பது அவசியம். ஆனால், பொதுமக்கள் இப்போது மிகவும் அலட்சியமாக இருக்கிறார்கள். சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதில்லை. முகக்கவசம் அணிவதில்லை. சமூக இடைவெளிக் கடைப்பிடிப்பதையும் முகக்கவசம் அணிவதையும் பொது ஜனங்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும். கரோனா பரவலை மக்களோடு இணைந்துதான் அரசாங்கத்தால் தடுக்க முடியும். அரசின் நடவடிக்கைகளுக்கு மக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும். அதற்கான வழிமுறைகளைக் கையாளுங்கள்" என்று கேட்டுக்கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி!

 

 

சார்ந்த செய்திகள்