கரோனா வைரஸ் உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகின் வளர்ந்த நாடுகளே அந்த வைரஸை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் திணறி வருகின்றன. இந்தியாவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மே 3 தேதி வரை ஊரடங்கை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
சமூக விலகலை முறையாக கடைபிடித்தால்தான் கரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியும் என்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும், பிறமாநிலங்களில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்கும், சொந்த ஊருக்கும் செல்ல முடியாத நிலை உள்ளது என்பதுதான் உண்மை. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகள் இதை கருத்தில் கொண்டு பிறமாநில தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி வருகின்றன.
இந்நிலையில் மராட்டிய அரசு போதிய நிவாரண உதவிகளை வழங்கவில்லை என குற்றம்சாட்டிய பிற மாநில தொழிலாளர்கள், தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக்கோரி மும்பை பாந்திரா ரயில் நிலையம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்பாட்டத்தை மும்பை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் பாந்திரா ரயில் நிலையம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.