சீனாவில் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவி அந்நாட்டு மக்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. இந்த வைரஸ் தாக்குதலில் இதுவரை 106 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1300 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவை மட்டுமல்லாது, கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தங்கள் நாட்டில் இந்த வைரஸ் பரவாமல் தடுக்க ஒவ்வொரு நாடும் அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.
இந்நிலையில், சீனாவில் இருந்து கேரளா வந்த 288 பேரை பாதுகாப்பு காரணம் கருதி, வீட்டு கண்காணிப்பில் வைத்துள்ளனர். 7 பேர் மட்டும் மருத்துவமனையில் தனித்தனி வார்டுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல், சுவாச பிரச்சனைகள், பிற அறிக்குறிகள் இருப்பதால் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இவர்களை பரிசோதிக்க, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தினால் நியமிக்கப்பட்ட மருத்துவர்கள் குழு கொச்சின் வருகிறது.
மேலும், சீனாவில் கொரோனா வைரஸ் பரவியதாக அறிவிக்கப்பட்ட இடங்களிலிருந்து கேரளா கோழிக்கோட்டிற்கு 72 பேர் வந்துள்ளனர். திருவனந்தபுரம், பதானமித்திட்டா, ஆலப்புழா, திருச்சூர் மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் சிலர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.