இந்தியாவிலேயே தற்போது கரோனா பரவல் அதிகமுள்ள மாநிலமாக கேரளா இருந்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் பதிவான 40,120 கரோனா பாதிப்புகளில் 21,445 பாதிப்புகள் கேரளாவில் இருந்து பதிவாகியுள்ளது. இதனையடுத்து கேரளாவில் கரோனாவைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசு, கேரளாவை அறிவுறுத்தி வருகிறது.
இதற்கிடையே தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகும், கேரளாவில் 40,000 பேருக்கு கரோனா ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் கேரளாவில் கரோனா நிலை பயப்படும்படியாக இல்லை எனக் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், "கூடுதல் தடுப்பூசிகளை கேட்டுள்ளோம். கடந்த வாரத்தை விட பாதிப்புகள் அதிகமிருந்தாலும், கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் மருத்துவமனைகளில் சிகிச்சைபெறுவோரின் எண்ணிக்கையும், ஐசியுவில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது. இது கரோனா நிலை பயப்படும்படியாக இல்லை என்பதைக் காட்டுகிறது. கரோனாவைக் கட்டுப்படுத்த சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.