புதுச்சேரியில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த வாரத்திற்கு முன்பு 10-க்குள்தான் இருந்து வந்தது. ஆனால் தமிழக பகுதிகளான கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கரோனா தொற்று அதிகம் உள்ளதால், ஊரடங்கு தளர்வின் காரணமாக இரு மாநில மக்களின் போக்குவரத்து புழக்கத்தால் கடந்த வாரம் முதல், புதுச்சேரியிலும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டு வருகிறது. இதனால் தமிழக எல்லைப்பகுதிகளான கனகசெட்டிகுளம், முள்ளோடை, மதகடிப்பட்டு, திருக்கனூர் உள்ளிட்ட புதுவை மாநில 4 எல்லைகளில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அங்கு 24 மணிநேரமும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இ-பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே புதுச்சேரிக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
ஏற்கனவே புதுச்சேரி கதிர்காமம் கரோனா அரசு சிறப்பு மருத்துவமனையில் கரோனா தொற்றுடன் 33 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரியில் இன்று மேலும் இரண்டு பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. முத்தையால்பேட்டை முத்தையா நகரை சேர்ந்த 55 வயது நபர் ஒருவர்க்கும், ரெட்டியார்பாளையம் மூகாம்பிகை நகரை சேர்ந்த 26 வயது வாலிபர் ஒருவருக்கும் புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமாக புதுச்சேரி மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 ஆக உள்ளது. மேலும் தமிழகத்திலிருந்து வந்து இங்கு சிகிச்சை பெறும் 6 பேரையும் சேர்த்தால் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 49 ஆக உள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “புதுச்சேரி மாநிலத்தில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தின் மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 43. தமிழகத்தை சேர்ந்த 6 பேரை சேர்த்தால் பாதிப்பு எண்ணிக்கை 49. புதுச்சேரியில் கரோனா வைரஸ் சமூக பரவலாக தொடங்கிவிட்டதா என்ற சந்தேகம் இருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.