இந்தியாவில் கரோனா ஊரடங்கு காலகட்டத்தில், பலரது விருப்பத்திற்குரிய பொழுதுபோக்காக ஆன்லைன் சூதாட்டங்கள் மாறியுள்ளன. இந்தத் துறையின் வளர்ச்சி இந்தியாவில், 150 மில்லியன் டாலர்களாக மாறியுள்ளதோடு, தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது. இத்தகைய சூதாட்ட விளையாட்டுகள் முக்கியமாக ஆண்களையும், குறிப்பாக இளைஞர்களையும் ஈர்த்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. ஆன்லைன் சூதாட்டங்களில் பங்கேற்பவர்கள் 75 சதவிகிதம் ஆண்களே.
குறிப்பாக போக்கர், ரம்மி போன்ற விளையாட்டுகள் இந்தப் பட்டியலில் முதன்மை இடத்தை வகி்க்கின்றன. லாட்டரி, ரேஸிங், பெட்டிங், காஸினோ, ரம்மி, போக்கர் என இளைஞர்களை ஈர்க்கும் பல்வேறு சூதாட்டங்கள் ஆன்லைன் மூலம் விளம்பரப்படுத்தப்பட்டு வருகின்றன.
கடந்த தீபாவளியின்போது, 'டீன் பாட்டி' என்ற விளையாட்டு, இந்தியாவில் பலரையும் ஈர்த்துள்ளதோடு, ஆன்லைன் முன்னணி விளையாட்டுகளில், முதல் பத்து இடத்துக்குள்ளும் இடம்பிடித்திருக்கிறது.
சட்டப்பூர்வமாக 18 வயதுக்கு மேற்பட்டவர்களே இத்தகைய ஆட்டங்களில் பங்குபெறமுடியும். ஆன்லைனில் இத்தகைய தடைகள் இல்லாததால், மைனர் சிறுவர்களும் சூதாட்டங்களில் பங்குபெறுவதாகத் தெரியவந்துள்ளது.
போலி ஐ.டி.க்களின் மூலம் இந்தச் சிறுவர்கள் வயதை மறைத்து, இத்தகைய ஆட்டங்களில் பங்கேற்கின்றனர். ஆன்லைன் சூதாட்டங்களுக்கு எந்த வரைமுறைகளும் இல்லாத நிலையில், இது சமூக, பொருளாதார ரீதியாகப் பெரிய தலைவலியாக உருவெடுக்கும் எனப் பலரும் கணித்துள்ளனர்.