இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அந்தந்த மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் கரோனா தடுப்பு பணிகள், கரோனா தடுப்பூசி போடும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. மேலும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும், மத்திய உள்துறை அமைச்சகமும் மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றன.
இந்நிலையில், சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வுகள் மே 4 முதல் ஜூன் 7 வரை நடைபெறும் என்றும் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வுகள் மே 4 முதல் ஜூன் 15 வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. கரோனா அதிவேகமாகப் பரவி வருவதால், மாணவ- மாணவிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, சி.பி.எஸ்.இ. தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா, ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதற்கிடையே சிபிஎஸ்இ தேர்வை ரத்து செய்யக் கோரி சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், ட்விட்டரில் இந்த தேர்வை ரத்து செய்யக் கோரி #cancelboardexam2021 என்ற ஹாஷ் டேக்கில் மாணவ- மாணவிகளும் பொதுமக்களும் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சி.பி.எஸ்.இ. தேர்வை ரத்து செய்யக் கோரி ட்விட்டரில் பதிவு செய்துள்ளனர். அதேநேரம், 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மத்திய தேர்வு வாரியத்துக்கு மனு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.