சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல், டெல்லி மாநில பா.ஜ.க.வின் ஊடகப்பிரிவு தலைவர் நவீன் ஜிண்டால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
தனியார் செய்தி தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற நூபுர் சர்மா, மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனை கண்டித்து, கான்பூரில் நடந்த சிறப்பு தொழுகைக்கு பின்னர், கடை அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அப்போது, அங்கு வன்முறை வெடித்தது. இதன் காரணமாக, குற்றச்சாட்டுக்கு ஆளான நூபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டாலுக்கு எதிராக பா.ஜ.க. தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பாக, பா.ஜ.க.வின் பொதுச்செயலாளர் அருண்சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து மதங்களையும், பா.ஜ.க. மதிக்கிறது; எந்த மதத்தையும் இழிவுப்படுத்துவதை ஏற்க முடியாது. எந்தவொரு மதத்தினரையோ, பிரிவினரையோ அவமதிப்பவர்களை பா.ஜ.க. முன்னிறுத்துவதில்லை. தங்களின் விருப்பப்படி, மதத்தைப் பின்பற்றவும், மதிக்கவும் உரிமை அளிக்கிறது அரசியலமைப்புச் சட்டம் என்று குறிப்பிட்டுள்ளார்.