இந்தியாவில் கரோனா பாதிப்பு மோசமடைந்துள்ளதையடுத்து, அதனைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை முடுக்கிவிட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், கரோனா பாதிப்பு அதிகமுள்ள 150 மாவட்டங்களில் ஊரடங்கை அமல்படுத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
இந்தநிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில், “மே 31ஆம் தேதி வரை கரோனா தடுப்பிற்கான தேசிய வழிமுறைகள் நாடு முழுவதும் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்தக் கடிதத்தில், மத்திய சுகாதாரத்துறையின் ஆலோசனையை சுட்டிக்காட்டியுள்ள மத்திய உள்துறை அமைச்சகம், அந்த ஆலோசனையின்படி, கடைசி ஒரு வாரத்தில் கரோனா உறுதியாகும் சதவீதம் 10 ஆக இருக்கும் மாவட்டங்கள் மற்றும் 60 சதவீத படுக்கைகள் நிரம்பியுள்ள மாவட்டங்கள் ஆகியவற்றில், சூழ்நிலைக்கு ஏற்றவாறு உடனடியாக கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது குறித்து யோசிக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.