Skip to main content

“ஆளுங்கட்சி உறுப்பினரின் அனுமதியுடன்தான் அத்துமீறியுள்ளார்கள்...” - காங்கிரஸ் எம்.பி. குற்றச்சாட்டு

Published on 13/12/2023 | Edited on 13/12/2023
"The Congress MP accused  trespassers have come only with the permission of the ruling party member

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடரானது வருகிற டிசம்பர் 22 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் ஆளும் பா.ஜ.க எம்.பி.க்களும், எதிர்க்கட்சி எம்.பி.க்களும் காரசாரமாக விவாதித்து வந்தனர். அப்போது, யாரும் எதிர்பாராதவிதமாக இரண்டு நபர்கள் திடீரென அத்துமீறி மக்களவைப் பகுதியில் நுழைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. 

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் அலுவல்கள் இன்று (13-12-23) வழக்கம்போல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, நாடாளுமன்ற வளாகத்தில் பார்வையாளர்களாக வந்திருந்த இரண்டு நபர்கள், பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மற்றும் திருமண கொண்டாட்டங்களில் பயன்படுத்தப்படும் வண்ண புகையை உமிழும் பட்டாசு போன்ற பொருட்களை எடுத்து அவை முழுக்க வீசியதாகக் கூறப்படுகிறது. மேலும், 'சர்வாதிகாரம் கூடாது' என அந்த இருவரும் முழக்கங்களை எழுப்பியபடி, அவைக்குள் தாவிக் குதித்து தப்பியோட முயன்றனர்.

அப்போது, நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த பாதுகாவலர்களும் அங்கிருந்த எம்பிக்களும் சுற்றி வளைத்து அந்த இரு நபர்களையும் பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.  நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு தினமான இன்று இருவர் அத்துமீறி நுழைந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

போலீசார் நடத்திய விசாரணையில், நாடாளுமன்றத்துக்கு வெளியே வண்ணப் புகையை வீசி போராட்டத்தில் ஈடுபட்டவர் மனோரஞ்சன், சாகர் ஷர்மா என்பது தெரியவந்தது. மேலும், இந்த 2 பேர் எவ்வித ஆவணமும் இன்றி நாடாளுமன்றத்திற்குள் வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்துக்கு வெளியே பிடிபட்ட இருவரும் செல்போன், கைப்பை என எதையும் எடுத்து வரவில்லை என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் நாடாளுமன்றத்துக்குள் நடந்த அத்துமீறல் தொடர்பாக விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை உட்பட எந்த ஆவணமும் இன்றி நாடாளுமன்றத்துக்குள் இருவரும் நுழைந்தது எப்படி என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து பாதுகாப்புத் துறை பதிலளிக்க வேண்டும் என மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தி வந்தனர். இது குறித்த விவாதங்கள் ஏற்கப்படாததால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இது குறித்து, காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “புதிய நாடாளுமன்ற கட்டடம் பாதுகாப்பானதாக இல்லை. ஆளுங்கட்சி உறுப்பினரின் அனுமதியுடன்தான் அத்துமீறியவர்கள் வந்துள்ளனர்” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்