தமிழகம், கேரளா உள்ளிட்ட 4 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் வருகின்ற மார்ச் 27ஆம் தேதி முதல் சட்டப்பேரவை தேர்தல் நடக்கவுள்ளது. கேரளாவில் வருகின்ற ஏப்ரல் ஆறாம் தேதி, ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கும் நேரடி போட்டி இருக்கும் என கருதப்படுகிறது.
இந்தநிலையில் கேரளா பாஜகவின் மூத்த தலைவரும், அம்மாநில சட்டமன்ற உறுப்பினருமான ராஜகோபால், இடதுசாரி கூட்டணியைத் தோற்கடிக்க, கடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளோடு பாஜக கூட்டணி வைத்ததாகக் கூறியுள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், "காங்கிரஸ் - இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - பாஜக கூட்டணியாக செயல்பட்ட தருணங்கள் பல இருந்தன. சில தொகுதிகளில் சில இணக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இது மிகவும் வெளிப்படையான விஷயம். மூவரும் ஒன்றாக இல்லை, ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டை தோற்கடிக்கவும், பாஜகவுக்கு வாக்குகளை உறுதிப்படுத்தவும் ஒருவருக்கொருவர் சுதந்திரமாக ஆதரவளித்தனர்" என தெரிவித்துள்ளார். இது கேரள அரசியலில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.