தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் நேற்று நள்ளிரவு கைது செய்தனர். இதற்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த எட்டு நாட்களாக நடந்த வருமானவரிச் சோதனை, 18 மணி நேரங்களுக்கு மேலாக நடந்த அமலாக்கத்துறை சோதனையை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் திமுக நிர்வாகிகள், அமைச்சர்கள் குவிந்துள்ளனர். இதன் காரணமாக மருத்துவமனையில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை குறித்து பல்வேறு அமைச்சர்களும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது குறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள அறிக்கையில், "இது மோடி அரசின் அரசியல் ரீதியான துன்புறுத்தல் மற்றும் பழிவாங்கும் நடவடிக்கையைத் தவிர வேறொன்றும் இல்லை. எதிர்க்கட்சியில் இருக்கும் நாங்கள் யாரும் இதுபோன்ற வெட்கக் கேடான நடவடிக்கைகளால் பயப்பட மாட்டோம்" என்று தெரிவித்துள்ளார்.