நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும் பல்வேறு மாநிலங்களில் நடந்து முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அடுத்த கட்டத் தேர்தலான நான்காம் கட்ட வாக்குப்பதிவு, நாடு முழுவதும் 9 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசம் உட்பட மொத்தம் 96 மக்களவைத் தொகுதிகளில் இன்று (13.05.2024) நடைபெற்று முடிந்தது.
இதற்கிடையே, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் லோகூர் மற்றும் டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.பி. ஷா ஆகியோர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, பிரதமர் மோடியையும், ராகுல் காந்தியையும் வணிகம் மற்றும் கட்சி சார்பற்ற மேடையில் பொது விவாதத்தில் பங்கேற்குமாறு கடிதம் மூலமாக அழைப்பு விடுத்திருந்தனர். அந்தக் கடிதத்தில், ‘மக்களவைத் தேர்தலையொட்டி, இரு தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுகள் மற்றும் சவால்களை மட்டுமே வைக்கிறீர்கள். ஆனால், அதற்கான அர்த்தமுள்ள பதில்கள் இல்லை. தவறான தகவல்கள் நிறைந்த இன்றைய டிஜிட்டல் யுகத்தில், வாக்குப்பெட்டியில் அர்த்தமுள்ள தேர்வுகளைச் செய்யக்கூடிய தகவலறிந்த வாக்காளர்களை உறுதிசெய்ய இதுபோன்ற விவாதம் அவசியம்.
ஒரு பாரபட்சமற்ற மற்றும் வணிக ரீதியான மேடையில் ஒரு பொது விவாதத்தின் மூலம் அரசியல் தலைவர்களிடமிருந்து நேரடியாகக் கேட்பதன் மூலம் குடிமக்கள் பெரிதும் பயனடைவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். பொதுமக்கள் ஒவ்வொரு தரப்பின் கேள்விகளையும் கேட்காமல், பதில்களையும் கேட்டால் நன்றாக இருக்கும்’ என்று கூறப்பட்டிருந்தது.
இதனையடுத்து, உத்தரப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், மக்களவைத் தேர்தல் குறித்த பொது விவாதத்தில் பங்கேற்குமாறு வலியுறுத்தி முன்னாள் நீதிபதிகள் கடிதம் எழுதியது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, “எந்த மேடையிலும் பொதுப் பிரச்சனைகள் குறித்து பிரதமருடன் விவாதிக்க நான் 100% தயாராக இருக்கிறேன். ஆனால் எனக்கு அவரை தெரியும். அவர் என்னுடன் 100% விவாதம் செய்ய மாட்டார்” என்று கூறினார். இது தொடர்பான, வீடியோவை ராகுல் காந்தி தனது எக்ஸ்(ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது.
இந்த நிலையில், விவாதம் நடத்துவது தொடர்பாக ராகுல் காந்தி சார்பில் காங்கிரஸ் கட்சி கடிதம் வெளியிட்டுள்ளது. அந்தக் கடிதத்தில், ‘விவாதத்துக்கான அழைப்பு தொடர்பாக காங்கிரஸ் கட்சி ஆலோசித்து. அதன்படி, ராகுல் காந்தியோ அல்லது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேயோ விவாதத்தில் கலந்து கொள்வார்கள்’ என்று தெரிவித்துள்ளது.