கர்நாடகாவில் அமைச்சரவை அமைப்பதில் நீடித்த சிக்கல் முடிவுக்கு வந்தது. முதல்வர் குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு நிதித்துறை, உள்துறை காங்கிரசுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கர்நாடகாவில் இரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைத்து, முதலமைச்சராக குமாரசாமி கடந்த மாதம் 23-ஆம் தேதி பதவி ஏற்றார். ஆனாலும் அமைச்சரவையில் இலாகா ஒதுக்கீடு குறித்து இரு கட்சிகளுக்கும் இடையே இழுபறி நீடித்து வந்தது.
இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ம.ஜ.த. தலைவர்கள் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்ப்பட்டதையடுத்து முதல்வர் குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு நிதி, பொதுப்பணி, மின்சாரம், போக்குவரத்து, கல்வி, தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்ட 12 துறைகளும் காங்கிரசுக்கு உள்துறை, விவசாயம், வருவாய், சுகாதாரம் உள்ளிட்ட 22 துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் 12 பேரும், காங்கிரஸ் சார்பில் 22 பேரும் அமைச்சர்களாக வருகிற 6-ஆம் தேதி பதவி ஏற்பார்கள் என்று முதலமைச்சர் குமாரசாமி கூறியுள்ளார்.