Skip to main content

ஸ்மிருதி இராணிக்கு போட்டியாக பிரியங்கா காந்தியின் கணவர்?

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Priyanka Gandhi's husband to compete with Smriti Rani?

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

அந்த வகையில், 80 மக்களவைத் தொகுதிகள் உத்தரப் பிரதேச மாநிலத்தில், ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25, ஜூன் 1 என ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் பா.ஜ.க சார்பில் மீண்டும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி போட்டியிடுகிறார். ஆனால், அதே வேளையில், அவரை எதிர்த்து போட்டியிட உள்ள காங்கிரஸ் வேட்பாளர் குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை. 

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா, அமேதி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். ராபர்ட் வதேரா தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், “அமேதி தொகுதி மக்கள் தங்கள் தவறை புரிந்துகொண்டு விட்டார்கள். அமேதியின் தற்போதைய எம்.பி.யான ஸ்மிருதி ராணி விஷயத்தில் மக்கள் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள். ராகுல் காந்திக்கு பதிலாக ஸ்மிருதி ராணியை தேர்ந்தெடுத்தற்காக அமேதி மக்கள் மனம் வருந்துகிறார்கள். 

சோனியா காந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அமேதியின் எம்.பி.யாக வேண்டும் என்று அம்மக்கள் விரும்புகிறார்கள் என்றே நான் எண்ணுகிறேன். நான் அரசியலில் இணைந்தால், அமேதி தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று அந்த தொகுதி மக்கள் என்னிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்” என்று கூறினார்.

2004, 2009 மற்றும் 2014 ஆகிய மக்களவைத் தேர்தல்களில் அமேதி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராகுல் காந்தி, கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலின் போது தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஸ்மிருதி ராணியிடம் தோல்வி அடைந்தார். அமேதி, வயநாடு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி, வயநாடு தொகுதியில் அதிகபட்ச வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்