பீகார் மாநிலத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
பீகார் மாநிலத்தில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வரும் நிலையில்,ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.மேலும் மாநில உயர் நீதிமன்றத்தில் இது குறித்து முறையிடுமாறு தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிராக பாட்னா உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகள் பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வினோத் சந்திரன், நீதிபதி மதுரேஷ் பிரசாத் அமர்வு முன்பு நேற்று (04.05.2023) விசாரணைக்கு வந்தது. அப்போது, "ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நிறுத்த வேண்டும். மக்களிடம் இருந்து ஏற்கனவே பெறப்பட்ட விவரங்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும். இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரையில் இந்த தகவல்களை யாரிடமும் பகிர கூடாது" என உத்தரவிட்டனர். இந்த வழக்குகளின் அடுத்த கட்ட விசாரணையை வரும் ஜூலை மாதம் 7 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.