கர்நாடகத்தில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகி இருப்பதுபோல தெரிகிறது. காங்கிரஸும் பாஜகவும் மாறி மாறி முன்னிலை வகித்துக் கொண்டிருக்கின்றன. எனவே, அந்த மாநிலத்தில் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் உதவியோடு கூட்டணி அரசு அமைவதற்கே வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
கர்நாடக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியது. தொடங்கியது முதலே பாஜகவும் காங்கிரஸும் மாறி மாறி முன்னிலை வகிக்கின்றன. வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் வெளியான முடிவுகளை பிரதிபலிக்கும் வகையில் இந்த முடிவுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் மதசார்பற்ற ஜனதாதளம் சுமார் 35 முதல் 40 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதையடுத்து அந்தக் கட்சியின் தலைவர் குமாரசாமி புதிய அரசு அமைப்பதில் முக்கிய பங்கு வகிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆட்சியில் பங்கு கேட்பாரா, முதல்வர் பதவியைப் பங்கு கேட்பாரா என்று விவாதிக்கப்படுகிறது. அதேபோல காங்கிரஸை தேர்வு செய்வாரா? பாஜகவை தேர்வு செய்வாரா என்ற விவாதமும் ஒருபக்கம் நடக்கிறது.
காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பதென்றால் சித்தராமய்யாவை முதல்வர் பதவிக்கு ஏற்க குமாரசாமி ஒப்புக்கொள்ள மாட்டார். ஏனென்றால் மதசார்பற்ற ஜனதாதளத்தில் இருந்து பிரிந்து காங்கிரஸில் சேர்ந்தவர்தான் சித்தராமய்யா. ஆகவே, காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முதல்வர் வாய்ப்பு கொடுத்தால் குமாரசாமி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கார்கே தலித் வகுப்பைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால்தான் தலித்துக்கு முதல்வர் வாய்ப்புக் கொடுத்தால் அதை வரவேற்பதாக தேர்தல் முடிந்தவுடன் சித்தராமய்யா அறிவித்தார்.
ஒருவேளை, பாஜகவுடன் மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணி அமைக்கும் வாய்ப்பு உருவாகுமா என்ற கேள்வி எழுந்தால், அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்றே கூறுகிறார்கள். இரண்டு கட்சிகளில் குறைவான இடங்களுடன் இருக்கிற கட்சியுடன்தான் மதசார்பற்ற கட்சி கூட்டணி அமைக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அப்போதுதான் தனது பிடி இறுக்கமாக இருக்கும் என்று அந்தக் கட்சி நம்புவதாக தெரிகிறது.