கேரளாவில் பெய்த அதீத கனமழை காரணமாக வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 282 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இமாச்சல பிரதேசம் மேக வெடிப்பு நிகழ்வு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சிம்லா மாவட்டத்தில் உள்ள ராம்பூர் பகுதியில் உள்ள சமேஜ் காட் பகுதியில் கனமழை பொழிந்தது. இதனால் அங்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து மாநில பேரிடர் மற்றும் மீட்புப்படையினர் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர். இதுவரை 50க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும், 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து இமாச்சல பிரதேச அமைச்சர் ஜகத் சிங் நேகி கூறுகையில், "சிம்லா மாவட்டத்தில் உள்ள சமேஜ் பகுதியில் இதுவரை 36 பேர் காணாமல் போயுள்ளனர். அதேபோல், மண்டியின் டிக்கன் பகுதியில் 8 பேரைக் காணவில்லை. 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஒருவர் காயமடைந்துள்ளார். குலு பகுதியில் உளள மலானாவில் மின்வாரியத்தின் தடுப்பணை உடைந்ததால் மக்கள் பரிதவித்து வருகின்றனர். அங்கு தற்போது சாலை இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
மேலும் அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு இது தொடர்பான தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். முன்னதாக மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட பெரும் பாதிப்பைத் தொடர்ந்து நிலவரத்தை மதிப்பீடு செய்ய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுவுடன் பேசினார். அப்போது தேசிய பேரிடர் மீட்புப் படையின் ஆதரவை வழங்குவதாக அமித்ஷா முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுக்கு உறுதியளித்தார்.