‘தூய்மையான இந்தியா 125 கோடி மக்கள் கையில் இருக்கிறது!’ - பிரதமர் மோடி
தூய்மையான பாரதத்தை 125 கோடி மக்கள் மனதுவைத்தால் மட்டுமே உருவாக்க முடியும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தூய்மை இந்தியா திட்டம் அறிவிக்கப்பட்டு இன்றோடு மூன்றாண்டுகள் நிறைவடைகிறது. இதுகுறித்து டெல்லியில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, ‘தூய்மை இந்தியா திட்டம் நிறைவேற வேண்டுமென்றால் அதற்கு இங்குள்ள மக்களின் மனநிலை மற்றும் பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் நிகழவேண்டும். ஆயிரம் மகாத்மாக்கள், லட்சம் மோடிகள், அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் மாநில அரசுகள் ஒன்றிணைந்தாலும் எட்டிவிட முடியாத தூய்மையான இந்தியா என்ற இலக்கினை, 125 கோடி இந்திய மக்கள் மனதுவைத்தால் அடைந்துவிடலாம்.
யாருமே தூய்மையை வேண்டாமென ஒதுக்கியதில்லை. ஆனால், அவரவர் அதைச் செய்வதில்தான் தயக்கம் காட்டுகின்றனர். அரசு சுத்தம் செய்யும் என்று எதிர்பார்க்காமல், மக்களே தூய்மைக்கான பணிகளை ஆனந்தமாக செய்யவேண்டும்’. மேலும், ‘தூய்மை இந்தியா திட்டம் நேர்மறையான முயற்சிகளின் போட்டி’ என தெரிவித்துள்ளார்.
- ச.ப.மதிவாணன்