மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் நடைபெறும் ஆசிர்வாத் யாத்திரையில் கலந்துகொண்டு பேசிய மத்திய அமைச்சர் நாராயண் ரானே, சுதந்திர தின விழா உரையின்போது மஹாராஷ்ட்ரா முதல்வர் உத்தவ் தாக்கரே இந்தியா சுதந்திரம் அடைந்த வருடத்தை மறந்துவிட்டதாகவும், தான் அப்போது அங்கிருந்திருந்தால் உத்தவ் தாக்கரேவை அறைந்திருப்பேன் என தெரிவித்தார்.
இதற்கு சிவசேனா கடும் எதிர்ப்பை தெரிவித்துவருகிறது. சிவசேனா உறுப்பினர்கள் அளித்த புகாரின்பேரில் மத்திய அமைச்சர் நாராயண் ரானே மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவரை கைதுசெய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் சிவசேனா தொண்டர்கள், மஹாராஷ்ட்ராவின் பல்வேறு இடங்களில் நாராயண் ரானேவை கோழி திருடர் என விமர்சித்து போஸ்டர்களை ஒட்டினர். நாராயண் ரானே இளம்வயதில் கோழிக்கடை நடத்தியதை வைத்து அவர்கள் இவ்வாறு போஸ்டர்களை ஒட்டியிருக்கின்றனர். இந்நிலையில் இன்று (24.08.2021) சிவசேனா தொண்டர்கள், நாராயண் ரானேவின் வீட்டை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். அப்போது சிவசேனா தொண்டர்களுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து இரு கட்சியினரையும் கலைக்க போலீசார் தடியடியில் ஈடுபட்டனர்.
அதேபோல் தானேவில் பாஜக - சிவசேனா தொண்டர்கள் கல்வீசி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். நாசிக்கில் பாஜக அலுவலகத்தின் மீது சிவசேனா தொண்டர்கள் கற்களை வீசி தாக்கியுள்ளனர்.