சீன நிறுவனங்கள் பலவும் இந்தியாவிலிருந்துகொண்டு உளவு பார்ப்பதாக மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது.
லடாக் எல்லைப்பகுதியில் நடைபெற்ற மோதலுக்குப் பிறகு இந்திய, சீன உறவில் விரிசல் விழுந்துள்ள சூழலில், இரு நாடுகளுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதனைத்தொடர்ந்து இந்தியாவில் இயங்கிவந்த சில சீன செயலிகள் தகவல் பாதுகாப்பு கொள்கைகளில் முரண்படுவதாகக் கூறி 59 செயலிகளைத் தடை செய்தது மத்திய அரசு. இந்நிலையில் இந்தியாவில் உள்ள பல சீன நிறுவனங்கள் அந்நாட்டு ராணுவத்திற்கு உளவு வேலை பார்ப்பதாக மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது. மேலும், அவ்வாறு செய்யும் நிறுவனங்களின் பட்டியல் ஒன்றையும் மத்திய அரசு தயார் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில், ஷிண்டியா ஸ்டீல்ஸ், அலிபாபா, ஹுவே, டென்சென்ட் போன்ற பல முன்னணி நிறுவனங்களும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், இந்நிறுவனங்கள் மீது எந்த விதமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகவில்லை.