இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே எல்லைகள் தொடர்பான பிரச்சனை தொடர்ந்து பூதாகரமாகியுள்ளது. அண்மையில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின் பிங்க்கும் இது குறித்து பேசியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சீனா நேற்று வெளியிட்டுள்ள வரைபடத்தில் இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தை அந்நாட்டுடன் சேர்த்துள்ளது.
இந்திய பகுதியான அருணாச்சலப்பிரதேசத்தை சீனா தங்கள் நாட்டுடன் சேர்ந்து சொந்தம் கொண்டாடி வருகிறது. ஏற்கனவே சீனா, அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 11 பகுதிகளின் பெயர்களை மாற்றியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது சீனா வெளியிட்டுள்ள ‘ஸ்டாண்டர் மேப்’பில் அருணாச்சலப் பிரதேசம் அந்நாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது.
அந்த வரைபடத்தில் அருணாச்சலம், அக்சாய் சின் பகுதிகள் சீன எல்லைக்குள் அடங்கியுள்ளது. மேலும் இதில் தைவானையும் இணைத்துள்ளது சீனா. சீனாவின் இயற்கை வள அமைச்சகம் இந்தப் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி, திபெத்தின் தெற்கில் உள்ள அருணாச்சலப் பிரதேசத்தின் 'ஜங்னன்' பகுதியை சீனா 'ஜிஜாங்' என குறிப்பிட்டு வரும் நிலையில், அருணாச்சலப் பிரதேசத்தின் தலைநகரான இடா நகரின் அருகில் உள்ள ஒரு நகரின் பெயரையும் சீனா மாற்றியுள்ளது.
சீனாவின் இந்த செயலுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜீனா கார்கே, “அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அக்சாய் சின் உள்ளிட்ட இந்தியப் பகுதிகள் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதியாகும். தன்னிச்சையாக கண்டுபிடிக்கப்பட்ட எந்த சீன வரைபடமும் அதை மாற்ற முடியாது. இத்தகைய சட்டவிரோத பிரதிநிதித்துவம் அல்லது இந்தியாவின் பிரதேசங்களை மறுபெயரிடுவதற்கு இந்திய தேசிய காங்கிரஸ் கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது. சீனா உட்பட அண்டை நாடுகளுடன் அமைதியான சகவாழ்வை நாங்கள் விரும்புகிறோம் மற்றும் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் அமைதியை விரும்புகிறோம்.
கல்வானுக்குப் பிறகு ‘எங்கள் எல்லைக்குள் யாரும் நுழையவில்லை’ என்று பிரதமர் மோடி, அவர்களுக்கு இலவச பாஸ் வழங்கியதை அடுத்து, 20 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். மே 2020க்கு முந்தைய நிலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். மேலும் மோடி அரசாங்கம் அதை மீட்டெடுப்பதை விட எதையும் விட்டுவிடக்கூடாது. இந்தியாவில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாடு, உலக அரங்கில் இந்திய எல்லைக்குள் சீனாவின் அத்துமீறல்களை அம்பலப்படுத்த மற்றொரு வாய்ப்பாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். எல்ஏசியில் 2000 சதுர கிலோமீட்டர் இந்தியப் பகுதியில் சட்டவிரோதமாக சீன ஆக்கிரமிப்பு முடிவுக்கு வருவதை மோடி அரசு உறுதி செய்ய வேண்டும்” என தனது கடும் கண்டனத்தை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
சீனா அத்துமீறவில்லை என தொடர்ந்து மத்திய அரசு தரப்பிலிருந்தும் மத்திய அமைச்சர்கள் சிலரும் கருத்து தெரிவித்துவரும் நிலையில், சீனாவின் இந்த புதிய வரைபடம் மேலும், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.