ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது. அதனால், இந்த 5 மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மும்முரமாகச் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் பல வாக்குறுதிகளை ஆம் ஆத்மி கட்சியினரும், காங்கிரஸ் கட்சியினரும் கொடுத்து வருகின்றனர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் 114 இடங்களை வென்று கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. 109 இடங்களை வென்று பா.ஜ.க எதிர்க்கட்சியாக இருந்தது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஜோதிராதித்யா சிந்தியா கட்சியில் இருந்து விலகி 22 எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜ.க.வில் இணைந்தார். இதனால், கமல்நாத்தின் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ.க ஆட்சி அமைந்தது. இந்த நிலையில் மத்தியப் பிரதேசத்தில் இந்த வருட இறுதிக்குள் சட்டமன்றத் தேர்தல் வரவிருப்பதால் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள பா.ஜ.க கடும் முயற்சி எடுத்து வருகிறது.
இதில், சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கும் முன்பாகவே சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை பா.ஜ.க சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. அதன்படி, மத்தியப் பிரதேசத்தில் 230 சட்டமன்றத் தொகுதிகளில் முதற்கட்டமாக 37 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை கடந்த ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி வெளியிட்டது.
இந்த நிலையில், 39 வேட்பாளர்கள் அடங்கிய இரண்டாவது வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க நேற்று வெளியிட்டுள்ளது. அந்த வேட்பாளர் பட்டியலில், மத்திய அமைச்சர் நரேந்திர தோமர், பிரஹலாத் படேல், பக்கன் குலாஸ்தே மற்றும் பா.ஜ.க தேசிய செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஆனால், இந்த பட்டியலில் தற்போதைய முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் மட்டும் இதுவரை இடம்பெறாதது மத்திய பிரதேச அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.
மத்திய பிரதேசத்தில் சுமார் 16 ஆண்டுகளாக முதல்வர் பதவியில் இருந்த சிவ்ராஜ் சிங் சவுகானின் பெயர், பா.ஜ.க வெளியிட்ட 3வது வேட்பாளர் பட்டியலிலும் இடம் பெறாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து முன்னாள் முதல்வர் கமல்நாத் பேசுகையில், “கோடிக்கணக்கான தொழிலாளர்களின் கட்சி என்று கூறிக்கொள்ளும் பா.ஜ.க.வின் உட்கட்சி தோல்வியின் வெளிப்பாடுதான் இது. வெற்றி நம்பிக்கை இல்லாத நெருக்கடியை பா.ஜ.க சந்தித்து வருகிறது. இந்த முறை தனது மிகப்பெரிய கோட்டையான மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும். பா.ஜ.க.வின் ‘இரட்டை என்ஜின் அரசு இரட்டை தோல்வியை நோக்கி நகர்கிறது. காங்கிரஸ் 200 இடங்களுக்கு மேல் தனிப்பெரும்பான்மையோடு வெற்றி பெறப் போகிறது” என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து, பா.ஜ.க வெளியிட்ட 3வது வேட்பாளர் பட்டியலில் ஒரே ஒரு பெயர் மட்டும் இடம் பெற்றுள்ளது. அமரவாடா தொகுதியில் கோண்டா சமூகத் தலைவர் மன்மோகன் ஷா பாட்டியின் மகள் மோனிகா பாட்டி போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த தொகுதி முன்னாள் முதல்வர் கமல்நாத்தின் சொந்த மாவட்டமான சிந்த்வாராவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.